கேரளாவில் உயிரிழந்த நெல்லை இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு
கேரளாவில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் பரிதாபமாக உயிரிழந்த நெல்லையை சேர்ந்த முருகன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்த முருகன் என்பவர் கேரளாவில் நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரழைத்து, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் 7 மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தன. இதனால் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கேரள மாநில சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், சம்பவம் தொடர்பாக பகிரங்க மன்னிப்பு கேட்டார். மேலும், உயிரிழந்த முருகன் குடும்பத்தினருக்கு கேரள அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணமும் அம்மாநில முதலமைச்சர் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் முருகன் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.