வைகை அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு

வைகை அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு
வைகை அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு

வைகை அணையிலிருந்து நாளை(02.06.2022) தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 62.57 அடியாக உள்ளது. போதிய நீர் இருப்பு உள்ளதால் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியாறு பிரதான கால்வாய் பாசன நிலங்களுக்கு நாளை (ஜூன் 2aaம் தேதி) காலை 10 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் முன்னிலையில் நடக்கும் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

நாளை முதல் அடுத்த 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், அதற்கடுத்த 75 நாட்களுக்கு முறைவைத்தும் என 120 நாட்களுக்கு, வினாடிக்கு 900 கனஅடி வீதம் மொத்தம் 6,739 மில்லியன் கனஅடி தண்ணீர் வைகை அணையிலிருந்து திறக்கப்படுகிறது. இதன் மூலம் பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில், முதல் போக பாசனப் பரப்பான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர், மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் என மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

இவ்வாறு தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பால் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com