TAPS  Pension  Scheme
TAPS Pension Schemejacto geo

TAPS ஓய்வூதியத் திட்டம்| அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கோரிக்கை.. 6 சிறப்பம்சங்கள் என்ன?

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று TAPS என்ற ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Published on
Summary

தமிழ்நாடு அரசு CPS திட்டத்தை மாற்றி TAPS திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கு கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

அரசு அலுவலர்களுக்கான CPS என அழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாகக் கடந்த 2003-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட நிலையில், ஏப்ரல் 1, 2003 முதல் பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியக்காரர்களுக்கு அரசு மட்டுமே முழுத் தொகையையும் வழங்க வேண்டியிருந்த நிலையில், CPS திட்டத்தில் அதனை மாற்றி அரசு அலுவலர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் அவர்களது சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்டு வந்தது.

எனினும் இந்த திட்டத்தில் ஓய்வு பெறும்போது கிடைக்கும் மொத்தத் தொகைக்குப் பிறகு, மாதாந்திர ஓய்வூதியம் பெற முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் இருந்ததால் இந்த திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

TAPS  Pension  Scheme
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்தது ஏன்..? பின்னணி என்ன..?

இந்த நிலையில், அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று TAPS (Tamil Nadu Assured Pension Scheme) என்று அழைக்கப்படும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தப் புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்:-

1. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

2. 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

3. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

4. அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

5. புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

6. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

மேற்கூறிய TAPS திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TAPS  Pension  Scheme
”ஆசிரியர்களை கைவிடமாட்டோம்; அவர்கள் என் குடும்பத்தினர் போன்றவர்கள்” - அமைச்சர் அன்பில் மகேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com