மேகதாது அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடக அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
Read Also -> கோவையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி !
அணை கட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, ஆய்வுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கிறோம், அணைக்கு அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது. இதைத்தொடர்ந்து மேகதாது அணை தொடர்பான செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது.
அணை அமையும் இடம், அணைக்கான திட்ட மதிப்பீடு, அணையின் பலன்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே அணைகட்டுவதாக கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற்றுவிட்டதால், இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு ஈடுபடும் எனத் தெரிகிறது. அதற்கும் மத்திய அரசின் ஒப்புதலை அவர்கள் பெற்றுவிட்டால், மேகதாதுவில் அணை அமைவதை தடுக்க இயலாது
Read Also -> சிலைக்கடத்தல் பிரிவுக்கு அதிகாரி நியமனம் !
இந்நிலையில் கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் அணைக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது