ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு: உடனடியாக விசாரணைக்கு வருகிறது தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு: உடனடியாக விசாரணைக்கு வருகிறது தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு: உடனடியாக விசாரணைக்கு வருகிறது தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு!
Published on

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடந்த மேல்முறையீட்டு மனுவை அடுத்த வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடிய நிலையில் 6 இடங்களைத் தவிர 44 இடங்களில் பாதுகாப்போடு உள்ளரங்கு கூட்டமாக நடத்துவதற்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்தது.

அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்டஅமர்வு, பொது இடங்களில் அணிவகுப்பு நடத்துவது என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை, இதுபோன்ற அணிவகுப்புகள், கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, முழுமையாகத் தடை செய்ய முடியாது, உளவுத்துறை தகவல்கள் என்ற பெயரில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஒரு அமைப்பின் அடிப்படை உரிமையை மாநில அரசு தடை செய்ய முடியாது என்றும், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, அதன் அடிப்படை உரிமையை உறுதி செய்திருக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்ததோடு, ஒழுக்கத்தை கடைபிடித்து அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்றும், பிறரை தூண்டும் வகையில் பேரணி நடத்தக்கூடாது என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு உத்தரவிட்டதோடு, அமைதியான முறையில் அணிவகுப்பு பேரணி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கும் உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அதனை உடனடியாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, தமிழக அரசின் மனுவை வரும் வெள்ளிக்கிழமை அதாவது நாளை மறுநாள் விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com