’பணி நிரந்தரம் இல்லை..’ தூய்மை பணியாளர்களுக்கு 6 புதிய திட்டங்கள் அறிவித்த அரசு!
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 13 நாட்களுக்கு பிறகு, நள்ளிரவில் அரங்கேறிய கைது நடவடிக்கை, தள்ளுமுள்ளு, சாலைமறியல் என பரபரப்போடு முடிவுக்கு வந்தது.
இரவு பகலாக மழை, வெயிலைப் பொருட்படுத்தாமல், “தங்களின் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தங்களின் சம்பளத்தைக் குறைக்கக் கூடாது” ஆகிய 3 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திவந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, பணி நிரந்தரம் இல்லாத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரை.
தூய்மை பணியாளர்களின் போராட்டம் முடிவுக்கு வராத நிலையில், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இப்பிரச்னை பூதாகரமாக வெடித்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
பணி நிரந்தம் இல்லை.. வேறு 6 திட்டங்கள்!
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தூய்மை பணியாளர்களுக்கான புதிய ஆறு அறிவிப்புகள் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.
மேலும் தூய்மை பணியாளர் நலவாரியம் சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளதாகவும், தூய்மைப் பணியாளர்கள் மீது முதலமைச்சர் தனி கரிசனத்துடன் இருக்கிறார் என்றும், அரசு ஊழியர் நலனிலும் முதல்வர் பெரும் கருணையுடன் உள்ளார் என்றும் கூறிய அவர், தூய்மைப் பணியாளர்களுக்கான 6 சிறப்பு திட்டங்களை அறிவிக்க உள்ளோம் என்று கூறினார். ஆனால் அந்த திட்டத்தில் எதற்காக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்களோ, அதற்கான பணி நிரந்தரம் என்று அறிவிப்பு இல்லை.
முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை குறிப்பிட்ட 6 திட்டங்கள்:
1. தூய்மைப் பணியாளர்களின் தொழில்சார் நோய்களை கண்டறிய, சிகிச்சை அளிக்க தனித் திட்டம் கொண்டுவரப்படும்
2. பணியின்போது இறக்க நேரிடும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்
3. தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பொருளாதாரத்தை உயர்த்திட, சுய தொழில் தொடங்கும்போது அதிகப்பட்சமாக ரூ.3.5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.
4. தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படித்தாலும், அவர்களின் உயர் கல்விக் கட்டணச் சலுகை, விடுதிக் கட்டண உதவித்தொகைக்காக புதிய உயர்கல்வித் உதவித்தொகை
5. நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு, இன்னும் 3 வருடங்களில் 30,000 குடியிருப்புகள் கட்டித்தரப்படும். கிராமப்புறங்களில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் முன்னுரிமை
6. தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும்; இந்தத் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டு படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்படும்