மத்திய பட்ஜெட் | 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி போராட்டம்.. ஸ்டாலின் எக்ஸ் பதிவு!
நாட்டின் 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநிலங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கராணம், பிகார் தேர்தலையொட்டி கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அதிகளவிலான நிதியை அம்மாநிலத்திற்கு ஒதுக்கியிருந்தது மத்தியரசு. ஆனால், இந்தப் பட்ஜெட்டிலில் அவ்வகையான முக்கியத்துவங்கள் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு அளிக்கப்படவில்லை. குறிப்பாக, தமிழ்நாடு என்ற பெயரே ஒரு சில முறை மட்டுமே பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல, தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த, மாநில நிதிப்பகிர்வை 41 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இப்பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை.
இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் குறித்தான விவாத்தில் தமிழக எம்.பிக்கள் மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து, தமிழக எதிர்கட்சித் தலைவர்களும் பட்ஜெட்டில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்திருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் தான் இன்று, பட்ஜெட்டில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை எனக் கூறி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழக முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில், திமுக அமைச்சர்கள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தான், இந்த ஆர்ப்பாட்டங்களை குறிப்பிட்டு “ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு தமிழ்நாட்டு மக்களின் குரலாகக் கேள்வி கேட்டுள்ளது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ”பட்ஜெட்டில் “ஜீரோ” கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மட்டுமே எண்ணமாகக் கொண்டு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு தமிழ்நாட்டு மக்களின் குரலாகக் கேள்வி கேட்டுள்ளது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் NDA கூட்டணிக்கு “ஜீரோ”-வைத் திருப்பியளிப்போம்” என தெரிவித்துள்ளார்.

