தமிழக மீனவர்கள் 433 பேரைக் காணவில்லை: மத்திய உள்துறை தகவல்
தமிழகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றபோது ஒகி புயலில் சிக்கிக் கொண்ட 433 மீனவர்களை இன்னும் காணவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் உள்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து காணாமல் போன மீனவர்கள் குறித்த இறுதிப் பட்டியலை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் எவ்வளவு பேரைக் காணவில்லை என்பது அதன் பின்னரே தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல் கேரளாவைச் சேர்ந்த 186 மீனவர்களையும் காணவில்லை என்றும், அந்த மாநிலத்தை சேர்ந்த 63 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓகி புயலில் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 5 பேர் உட்பட 700 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.