தமிழக ஏற்றுமதி $58.9 பில்லியனாக உயர்வு.. வளர்ச்சிக்கு பங்களித்த துறைகள்!
தமிழ்நாட்டின் ஏற்றுமதி 58.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தெரிவித்துள்ளார். 2024ஆம் நிதியாண்டில் 43.2 பில்லியன் டாலராக இருந்த இந்திய ஏற்றுமதி மதிப்பு 2025இல் 52.07 பில்லியன் டாலராகவும் நடப்பு நிதியாண்டில் 58.9 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 13 சதவீதம் பங்களிப்புடன் தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாம் இடத்தைத் தக்கவைத்துள்ளது. மின்னணுப் பொருட்கள், ஜவுளி, பொறியியல் பொருட்கள், தோல் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளன.
ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்களால் ஸ்மார்ட்போன்களுக்கான முக்கிய உலகளாவிய உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாறியுள்ளதால் ஏற்றுமதியில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஏற்றுமதி மையமாக இம்மாநிலம் உருவெடுத்துள்ளது; நாட்டின் மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் 42% பங்களிப்பை வழங்குகிறது. வலுவான உற்பத்தித் துறை, உலகளாவிய முதலீடுகள் மற்றும் விரிவடைந்து வரும் உற்பத்தித் திறன் ஆகியவை இந்தியாவின் ஏற்றுமதி வெற்றிக்குத் தமிழ்நாட்டை ஒரு முக்கிய உந்துசக்தியாக மாற்றியுள்ளன.

