”அந்த அச்சம் இருக்கும்வரை அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான்”.. வரலாற்றை மாற்றிய அண்ணா!

”அந்த அச்சம் இருக்கும்வரை அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான்”.. வரலாற்றை மாற்றிய அண்ணா!
”அந்த அச்சம் இருக்கும்வரை அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான்”.. வரலாற்றை மாற்றிய அண்ணா!

சாமானியத் தமிழர்களை அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்த்திய பெருமைக்குச் சொந்தக்காரர் பேரறிஞர் அண்ணா. அவரது பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றி இங்கு சிறுதொகுப்பாக காணலாம்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை மாற்றி எழுதியவர், பேரறிஞர் அண்ணா. தமிழர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கான அரசியல் பாதையை வகுத்துத் தந்தவர். 'இந்தி, இந்து, இந்துஸ்தான்..' என்ற ஒற்றைப் பண்பாடு அரசியலுக்கு எதிராக 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்..' என்ற தமிழ் தேசிய எழுச்சியை தமிழ்நாடு அரசியலில் இரண்டற கலக்கச் செய்தவர் அண்ணா.

1967ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவினால் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட திராவிட இயக்க ஆட்சியை இன்றுவரை எவராலும் அசைத்துப் பார்க்க முடியவில்லை. சி.என்.ஏ. என்ற மூன்றெழுத்தால் அறிமுகமான அண்ணாதுரை தான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் தளபதி என்றால் மிகையல்ல. மாலைகளை மாற்றி, உறுதிமொழி ஏற்று, செலவின்றி திருமணம் செய்யும் சீர்திருத்த மணவிழா முறைக்கு, சட்டப்பூர்வ அங்கீகாரம் தந்தவர் அறிஞர் அண்ணா. தமிழை விழுங்கத் துடித்த இந்திக்கு (திணிப்பு) கடிவாளம் போட, இருமொழிக் கொள்கையை கொண்டு வந்தவர்.

தலை சீவ மாட்டார், கண்ணாடி பார்ப்பதில்லை, மோதிரமோ கைக்கடிகாரமோ அணியும் பழக்கமில்லை, ஆனால் மக்கள் மன்றமேறினால், உரையும் மொழிப்புலமையும் உறுப்பினர்களை ஆட்கொண்டுவிடும். ஒருமுறை அண்ணா மற்றும் அவரது கட்சியின் 50 உறுப்பினர்கள் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபோது ஆளும் காங்கிரஸ் கட்சி, அண்ணாவினால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டை கேலியுடன் சுமத்தியது. அதற்கு நயம்பட அண்ணா அளித்த பதிலைக் கேட்டு காங்கிரஸ் உறுப்பினர்களே வியந்தனர்.

'எதிர்க்கட்சி சரியில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி சொல்வதைப் பார்த்தால், விரைவில் நீங்களே அந்தக் குறையை போக்கிவிடுவீர்கள் என்று எண்ணுகிறேன்... ' நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார், அண்ணா.

அரசியல், பொருளாதாரத் துறைகளில் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற அண்ணா, வரலாற்றிலும், இலக்கியத்திலும் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார். அறிஞர் அண்ணா, தமிழில் அடுக்குமொழி சொல்லாடலில் ஒப்பில்லாதவர். தமிழில் அடுக்குமொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் அதேபோன்று பேச முடியுமா? என ஒருமுறை அண்ணாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு, 'ஏன் முடியாது, எப்படிப்பட்ட சொற்றொடர் வேண்டும்?' எனக் கேட்டுள்ளார்.

Because என்ற சொல் தொடர்ந்து மூன்று முறை வரும்படி ஒரு சொற்றொடர் சொல்ல முடியுமா? எனக் கேட்டுள்ளார்கள். அதற்கு சற்றும் யோசிக்காமல், "No sentence ends with because, because, because is a conjunction" என பேரறிஞர் அண்ணா பதில் கூறி அதிர்ந்து போயினர் கேள்வியை எழுப்பியவர்கள். அவர்தான் பேரறிஞர் அண்ணா, தென்னாட்டின் பெர்னாட்ஷா.

“அந்த அச்சம் இருக்கும்வரை...” - அண்ணாவின் அனல் பேச்சு:

திமுக ஆட்சி முதன்முதலாக பதவியேற்று ஓராண்டை அண்ணாத்துரை ஆற்றிய உரை ஒன்று அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி மீண்டும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. “முப்பெரும் சாதனைகளை இந்த ஓராண்டிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, என்னுடைய ஆட்சி செய்திருக்கிறது.

1. சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம்
2. தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர்
3. இருமொழிக் கொள்கை - தமிழ், ஆங்கிலம்

இதையெல்லாம் மாற்றவேண்டும் என்று இப்பொழுது துடிப்பதாக நான் கேள்விப்படுகிறேன். சரி, நீங்கள் எங்களைப் பதவியைவிட்டு விலக்கலாம்; அது முடியுமா? என்று நான் சவால் விட மாட்டேன்; முடியும். ஆனால், எங்களை நீக்கிவிட்டு நீங்கள் வந்து உட்கார்ந்தால், இதையெல்லாம் நாம் இல்லாதபோது, அவர்கள் அல்லவா செய்துவிட்டார்கள். ஆகவே, அதையெல்லாம் மாற்றலாம் என்று நினைத்தால், அடுத்த நிமிடம் மாற்றினால் என்னாகும் நம்முடைய நிலை, நாட்டினுடைய நிலை எப்படிப்பட்ட எதிர்ப்பு கிளம்பும் என்று நினைக்கும்பொழுது, ஒரு அச்சம் உங்களை உலுக்கும் - அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அண்ணாத்துரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்'' என்று அண்ணா ஆற்றிய உரைதான் அது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com