உள்ளாட்சித் தேர்தலுக்கு முதல்முறையாக பறக்கும் படை
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முதல்முறையாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக பறக்கும் படையினர் களமிறக்கப்படுகின்றனர். 2 அல்லது 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 3 பறக்கும் படைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள அனைத்து நாட்களிலும் முதன்மை பொறுப்பு அலுவலர், காவல்துறையினரைக் கொண்ட பறக்கும் படை 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாதென மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் காரணமாகவே பொங்கல் பரிசுத் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படுவதாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, தேர்தல் விதிகள் அமலில் உள்ள வரை 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.