ஜெயலலிதா தங்கிய அறை; கருணாநிதி பயன்படுத்திய கார்..- முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயண ஏற்பாடு

ஜெயலலிதா தங்கிய அறை; கருணாநிதி பயன்படுத்திய கார்..- முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயண ஏற்பாடு
ஜெயலலிதா தங்கிய அறை; கருணாநிதி பயன்படுத்திய கார்..- முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயண ஏற்பாடு

பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக நாளை (17-ஆம் தேதி) டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய முதல்வருக்கான அறையை மு.க.ஸ்டாலின் பயன்படுத்தவுள்ளார்.

தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதன்முறையாக நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். முதல்வரை டெல்லி விமான நிலையத்தில், தமிழ்நாடு சிறப்புப் பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், திமுக மக்களவைக் குழுத் தலைவர் டிஆர்பாலு, திமுக எம்பிக்கள் உள்ளிட்டோர் வரவேற்க திட்டமிட்டுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு செல்லும் முதல்வர் அங்கு காவல்துறையினரின் மரியாதையை ஏற்கவுள்ளார்.

தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர்கள் தங்குவதற்கான தனிச்சிறப்பு அறையில் மு.க.ஸ்டாலின் தங்கவுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சூட் ரூமில் தங்குகிறார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழ்நாடு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினாலும், ஜெயலலிதா தங்கிய சிறப்பு அறையை பயன்படுத்தாமல் அமைச்சர்களுக்கான அறையில் மட்டுமே தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்பொழுது அந்த அறையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்த உள்ளதையடுத்து அதற்கேற்க சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அறையில் இருந்த பச்சை நிறத்திலான டைல்ஸ்கள், திரைச்சீலைகள், நாற்காலிகள் மாற்றப்பட்டுள்ளன.

அதேபோல மு.கருணாநிதி தமிழ்நாடு முதல்வராக இருந்தபோது கடைசியாக டெல்லி சென்ற சமயத்தில் பயன்படுத்திய கார் இன்னும் டெல்லியில் உள்ள திமுக எம்பி வீட்டில்தான் நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வராக முதன்முதலாக டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின், தனது தந்தை பயன்படுத்திய காரை பிரதமர் இல்லத்திற்கு செல்ல பயன்படுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த கார் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், முதல்வர் ஸ்டாலினுக்காக புல்லட் புரூஃப் காரை பிரதமர் மோடி பிரத்யேகமாக அனுப்ப உள்ளதாகவும் தகவல் உள்ளது. கடந்த காலங்களில் முதல்வர்களாக கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் டெல்லி சென்றபோது பிரதமர் இல்லத்தில் இருந்து புல்லட் புரூஃப் காரை அனுப்புவது அவர்கள் தரப்பிலான சிறப்பு கவுரவமாக இருந்தது. அதன் பிறகு ஸ்டாலினுக்கு இந்த வரவேற்பை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமருடனான சந்திப்பின்போது நீட் தேர்வு ரத்து, மாநில அரசுகளே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்துவது, செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது உள்ளிட்ட 35 அம்சங்களை மு.க.ஸ்டாலின் முன்வைக்க உள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியுடன் பத்து நிமிடங்கள் தனிப்பட்ட சந்திப்புக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை சந்திக்கும் மு.க.ஸ்டாலின், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து காவிரி பிரச்னை குறித்து பேசவிருக்கிறார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோரையும் தமிழக முதல்வர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.

மொத்தத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம், தமிழகம் சார்ந்த முக்கிய கோரிக்கைகள் வாயிலாகவும், தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com