திராவிட மாடல் ஆட்சி என்பது மதத்துக்கு எதிரானது கிடையாது, மதவாதத்துக்கு எதிரானது - முதல்வர்

திராவிட மாடல் ஆட்சி என்பது மதத்துக்கு எதிரானது கிடையாது, மதவாதத்துக்கு எதிரானது - முதல்வர்

திராவிட மாடல் ஆட்சி என்பது மதத்துக்கு எதிரானது கிடையாது, மதவாதத்துக்கு எதிரானது - முதல்வர்
Published on

தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் திராவிட மாடல் ஆட்சி என்பது மதத்துக்கு எதிரானது கிடையாது என்றும், மதவாதத்துக்கு மட்டுமே எதிரானது என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 1250 கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் 1250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள திருக்கோயில்கள் என 2500 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 2 லட்சம் வீதம் ரூ.50 கோடி நிதி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருக்கோயில்களுக்கான திருப்பணி மேற்கொள்வதற்கான நிதியை கோயில் பொறுப்பாளரிடம் வழங்கினார். பின்னர், தமிழக முதல்வர் பேசியதாவது, “2022 ஆண்டில் மட்டும் ஓராண்டில் நான் 640-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். 580 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள். 95 நிகழ்வுகள் கழக மற்றும் பொது நிகழ்ச்சி.

கடந்த ஓராண்டில் 8580 கிலோமீட்டருக்கு மேல் சுற்றி வந்துள்ளேன். இதன் மூலம் பொதுமக்கள் 1,03,8400 பேர் பயன் அடைந்துள்ளனர். அரசு நிகழ்ச்சிகளில் என் துறை சார்ந்த 32 நிகழ்ச்சிகளிலும், தொழில் துறை சார்ந்து 30 நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளேன். மூன்றாவது அதிகமாக கலந்து கொண்டது இந்து சமய அறநிலையத் துறை நிகழ்ச்சிகளில் தான். இந்து சமய துறை நிகழ்ச்சிகளில் 25 பங்கேற்றுள்ளேன். எல்லோருக்கும் எல்லாம் என்ற ஆட்சி என்னுடைய ஆட்சி. இது திராவிட மாடல் ஆட்சி. எங்களை மதத்தின் பெயரால் எதிரானவர் என்று கூறுகின்றனர். மத வாதத்துக்கு தான் எதிரி. மதத்துக்கு எதிரானவர்கள் இல்லை.

இந்த ஆட்சியில் திருக்கோயிலுக்கு ஏராளமான பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கோயில்களை புனரமைக்க ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அனுமதி அளித்த பிறகே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கீழ் மட்டும் 43000 கோயில் உள்ளது. கோயில்களின் பழமை மாறாமல் சீரமைக்க குடமுழுக்கு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 3886 கோயில்களில் திருப்பணிகள் நடத்த வல்லுநர் குழு அனுமதி அளித்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 112 கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற அறிவிப்பில் இடம் பெறாத அறிவிப்பாக தற்போது இந்த நிதி கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சொன்னதை மட்டும் செய்யும் ஆட்சி மட்டும் இல்ல இது. இந்த ஆட்சி சொல்லாததையும் செய்யும் ஆட்சி. கோயில்கள் கலை சின்னங்கள், பயன்பாட்டு சின்னங்களை கொண்டுள்ளன. நமது சிற்ப திறமை, கலை திறமையின் சாட்சி வெளிப்படுத்தும் இடமாக உள்ளது. அதனை பாதுகாக்க வேண்டும். கோயில்கள் சமத்துவம் உலவும் இடமாக இருக்க வேண்டும். எந்த மனிதனையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்க கூடாது.

அதனால் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கொண்டு வந்தோம். மனிதர்கள் மட்டும் இல்லை‌. கோயில்களிலும் பணக்கார கோயில் சிறுக்கோயில் என்று இல்லை. அனைத்தையும் ஒன்றுபோல் கருதி உதவி செய்வோம். மதம், சாதி, கோயில்களிலும் வேற்றுமை இந்த அரசுக்கு இல்லை‌. உங்களின் பாராட்டு எங்களுக்கு தேவை. தொடர்ந்து, ஊக்கப்படுத்துங்கள். எங்களை ஏளனம் பேசுவோருக்கு தெரியட்டும். விமர்சனம் செய்வோருக்கும் எங்களின் செயல் என்ன என்பது இப்போது தெரியட்டும். அதற்கு இந்த மேடையே சாட்சி. சான்றாகும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வரை இந்த அரசு உழைக்கும்” இவ்வாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருக்கயிலாயப் பரம்பரை தருமையாதீனம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவாஞான பாலய சுவாமிகள், சின்ன காஞ்சிபுரம் அழகிய மணவாள சம்பத்குமார ராமானுஜ ஜீயர் ஆகியோர் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com