‘கஜா’ பாதிப்புகளை நாளை ஹெலிகாப்டரில் பார்வையிடும் முதல்வர்
‘கஜா’புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, தமிழக முதல்வர் பழனிச்சாமி நாளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்கிறார்.
‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. புயல் ஓய்ந்தாலும் மக்களின் இன்னல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சூறைக்காற்றில் மேற்கூரைகள் பறந்த நிலையில், வீட்டிலிருக்கும் அனைத்து பொருள்களும் மழையால் சேதமடைந்தன.
புயல் ஏற்படுத்திய சேதங்கள் மிக அதிகமென்றாலும், மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் நிலையையும் ஏற்படுத்திச் சென்றது. பல ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின்சாரம் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, புயல் பாதித்த பகுதிகள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சில இடங்களில் தங்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனக் கூறி அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, தமிழக முதல்வர் பழனிச்சாமி நாளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல் தாக்கி நான்கு நாட்கள் ஆகியும், முதல்வர் பழனிசாமி பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவில்லை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தநிலையில், முதல்வர் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதனையடுத்து, ‘கஜா’ புயல் பாதிப்பு அறிக்கையையும் சமர்பிக்கவும், மத்திய அரசின் நிவாரண நிதியை கோரவும் முதலமைச்சர் பழனிசாமி 22ஆம் தேதி டெல்லி செல்கிறார். அப்போது, ‘கஜா’ புயலின் சேதம் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைக்கவுள்ளார். அத்துடன் ‘கஜா’ புயல் குறித்து மேற்கொண்ட ஆய்வறிக்கைகையும் பிரதமரிடம் கொடுத்து, நிவாரண நிதியை அவர் கோர இருக்கிறார்.