“ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு வாய்ப்பே இல்லை” - முதலமைச்சர் மீண்டும் உறுதி
தமிழ்நாட்டில் இனி ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பே இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் மீண்டும் உறுதி அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் பழனிசாமி,காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மாநில அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளதாக தெரிவித்தார். அனைத்தையும் ஆராய்ந்தே சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலைவாழ் மக்களுக்கு எளிதாக மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே நீலகிரியில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும் விதிகளின் அடிப்படையில் ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு பதிலாக பத்து மரங்கள் நடப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
சென்னை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 14 வகையான நெகிழிப்பொருட்களை ஒழிப்பதற்கு, வணிகர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.