“கோதாவரி - காவிரி இணைப்பே தமிழக அரசின் லட்சியம்” - முதலமைச்சர் பழனிசாமி
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதே தமிழக அரசின் லட்சியம் என பொதுப்பணித்தறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்
காவிரி நதியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் பல ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. இந்த சூழலில் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.அதற்கான ஆரம்ப கட்ட பணிகளையும் கர்நாடக அரசு தொடங்கிவிட்டது. இந்நிலையில் காவிரியில் புதிய அணை கட்டுவதற்கு தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேகதாது அனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பலமுறை கடிதம் எழுதியுள்ளார். அதில் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவித்து பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி குடிமராமத்து பணிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், விவசாயிகள் மற்றும் மண்பானை செய்பவருக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் அறிவுறுத்தினார். மேலும் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்துவதே அரசின் லட்சியம் என்றும், அதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் பச்சத்தில் அதன் மூலம் தமிழகத்திற்கு 120 டிஎம்சிக்கு மேல் நீர் கிடைக்கும் என்று பொதுப்பணித்தறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெண்ணையாறு-செய்யாறு இணைப்பு திட்டம், பெண்ணையாறு-பாலாறு இணைப்பு திட்டம், காவிரி, மேட்டூர் அணை, சரபங்கா, திருமணிமுத்தாறு, அய்யாறு இணைப்பு திட்டம், காவிரி, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிகள் இணைப்பு திட்டம் ஆகிய பணிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.