எண்ணெய் கசிவால் மாசடைந்துள்ள எண்ணூர் கடற்கரை பகுதிகளை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆய்வு செய்கிறார்.
கடந்த ஜனவரி 28-ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால், கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது. கடற்கரை பகுதில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட கடற்கரை பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று எண்ணூரில் எண்ணெய் படலத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் பின்னர் பேட்டியளித்த அவர், பாதிப்புகளை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எண்ணெய் கசிவால் மாசடைந்துள்ள கடற்கரை பகுதிகளை இன்று ஆய்வு செய்கிறார்.