கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்

கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்
கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி -  மு.க.ஸ்டாலின்
'சுதந்திர தின நாளில் முதல்வர்கள்தான் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி' என உரையாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து அவர் சுதந்திர தின உரையாற்றினார். சுதந்திர தின விழா உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
''400 ஆண்டுகள் பழமை கொண்ட இந்த கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளேன். கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின நாளில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்கிறேன். சுதந்திர தின நாளில் முதல்வர்கள்தான் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. எத்தனையோ முதலமைச்சர்கள் வந்தாலும் கொடியேற்றும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர் கலைஞர். இந்தியாவின் அனைத்து முதலமைச்சர்களுக்கும் இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர் சுதந்திர சிந்தனையாளர் கலைஞர்.
திராவிடக் கட்சியின் ஆணிவேரான நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த நூற்றாண்டு இந்த ஆண்டு. செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.க்கு 150ஆவது பிறந்தநாள் இந்த ஆண்டு. மகாகவி பாரதிக்கும் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.
75-வது சுதந்திர தின நாளை நினைவுகூரும் வகையில் எழுப்பப்பட்டுள்ள மிகப்பெரிய தூண் வெறும் கல்லாலும் மண்ணாலும் உருவானதல்ல, சுதந்திரத்திற்காக போராடியவர்களின் ரத்தத்தாலும் சதையாலும் எழுப்பப்பட்ட தூண். வேலுநாச்சியார், கட்டபொம்மன், தில்லையாடி வள்ளியம்மை, பெரியார் போன்ற ஏராளமான தியாகிகளின் மூச்சுக்காற்றால் கட்டப்பட்டது நினைவுத்தூண். விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்.
சீனப் போரின் போது இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக நிதிதிரட்டி கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா. பாகிஸ்தான் போரின் போது இந்திய நாட்டிற்காக நிதிதிரட்டி கொடுத்தவர் கலைஞர். கார்கில் போரின் போது மூன்று தவணைகளாக நிதி திரட்டி கொடுத்த அரசு கலைஞர் அரசு. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவச பேருந்து பயணம், தியாகிகளுக்கு நினைவில்லம் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுதேசி என்பது சிந்தனையாக செயலாக மாற வேண்டும் என்று நினைத்தவர் வ.உ.சி. தன்னிறைவு பெற்ற நாடாக திகழ வேண்டும் என்ற வ.உ.சி.யின் கனவை கொண்ட அரசாக செயல்பட்டு வருகிறது.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்களை கொண்டு நிறுத்தியுள்ளது கொரோனா. கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டுவர மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பே காரணம். தமிழ்நாட்டின் நிதிநிலையை தமிழக மக்கள் நன்கு அறிந்திருக்க கூடும். நிதி நெருக்கடியான சூழலில் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் வெற்றியும் கண்டிருக்கிறோம்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
திமுக ஆட்சி பொறுப்பெற்ற பின்னர் முதல்முறையாக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com