பெண்களின் பாதுகாப்பிற்காக “181” தொலைபேசி சேவை - முதல்வர் தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக தொலைப்பேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
அவசர போலீஸ் உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 என்ற தொலைப்பேசி சேவை வரிசையில் பெண்களின் பாதுகாப்பிற்காக 181 என்ற இலவச சேவை இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து 181 என்ற தொலைபேசி சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த சேவையை டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. இதைப் போல் தமிழக அரசும் இந்த சேவையை தொடங்கவுள்ளது. வரதட்சனை கொடுமை, பாலியல் தொல்லை புகார் மற்றும் பாதுகாப்புக்கு இந்த எண்ணை அழைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலை பேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை நிர்வகிக்க 5 வழக்கறிஞர்கள், 5 மன நல ஆலோசகர்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் விவரங்கள், தொலைபேசி எண்கள் 181 மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த பகுதியில் பெண்ணுக்கு உதவி தேவைப்படுகிறதோ அந்த எல்லையில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு உடனடியாக உதவிகள் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவிததனர்.