தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
நிலக்கரி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் எண்ணூர் அனல் மின் நிலையம் மூலமாக தற்போது 450 மெகாவாட் மின்சாரமும், வடசென்னை அனல் மின்நிலையம் மூலமாக 2 ஆயிரத்து 430 மெகாவாட் மின்சாரமும், வல்லூர் தேசிய அனல்மின் நிலையம் மூலமாக ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள அனல் மின்நிலையங்களை பொறுத்தவரை நிலக்கரி பற்றாக்குறை பிரச்னையால், முழுமையான அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலையிலேயே உள்ளது. தமிழக அரசு தரப்பிலும் நிலக்கரி பற்றாக்குறை குறித்து தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் நிலக்கரி பற்றாக்குறை பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் தமது கடிதத்தில், “ஒருநாள் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. அதனால், தினமும் 72,000 டன் நிலக்கரியை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “தமிழக அனல்மின் நிலையங்களுக்கு 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது. நிலக்கரி உரிய அளவில் கிடைக்காவிட்டால் அனல் மின் நிலையங்களை மூடும் நிலை ஏற்படும்” என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.