கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதிமுதல் கோடை விடுமுறை விடப்பட்டன. விடுமுறைக்குப் பின் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்தக் கல்வியாண்டில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சீருடை மாற்றப்பட்டுள்ளது. புதிய சீருடையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று அறுவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு இன்றே இலவசப் பாடப்புத்தகங்களும் இலவச சீருடைகளும் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. காலை 9.15 மணிக்கு ள் பள்ளிக்குள் இருக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருக்கும் மாற்றப்பட்ட புதிய சீருடையில் பிறந்த நாள் உட்பட அனைத்து நாட்களிலும் பள்ளிக்கு வர வேண்டும். லோ ஹிப், இறுக்கமான பேன்ட்களை அணியக் கூடாது. டக் இன் செய்ய ஏதுவான அளவில் சட்டை யின் நீளம் இருக்க வேண்டும். முறுக்கு மீசை வைத்தல், கைகளில் ரப்பர் பேண்ட் அணிதல், கடுக்கன் அணிதல் கூடாது. பைக், கைபேசிகள் பள்ளிக்குள் அனுமதி இல்லை.