"மத்திய அரசை வம்புக்கு இழுப்பதையே உதயநிதி வேலையாக வைத்துள்ளார்" - அண்ணாமலை

திமுக அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அண்ணாமலை, நிவாரணப்பணிகளை கவனிக்காமல் மத்திய அரசை வம்புக்கு இழுப்பதே அமைச்சர் உதயநிதியின் வேலையாக உள்ளதாக கூறினார்.

அப்போது பேசிய அவர், “இந்திய அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதே திமுகவின் அரசியலாக இருந்துவருகிறது. நிவாரணப்பணிகளை கவனிக்காமல் மத்திய அரசை வம்புக்கு இழுப்பதையே வேலையாக வைத்துள்ளார் அமைச்சர் உதயநிதி.

தமிழகத்தில் வெள்ள பாதிப்புகள் மோசமாக கையாளப்பட்டதாக இந்திய அளவில் கூறப்படுகிறது. வெள்ள பாதிப்புக்கு குஜராத்துக்கு அதிக நிவாரணத்தொகை ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் குஜராத்தின் ‘டக் தே’ புயலுக்கு மத்திய அரசு ரூ.1000 கோடி தான் கொடுத்தது, கொரோனா பாதிப்பின் போது கூட தமிழகத்தை விட குஜராத்திற்கு குறைவாகவே நிதி வழங்கியது.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் டி.ஆர். பாலுவிற்கு நிதிஷ்குமார் ஹிந்தி பாடம் எடுத்தார். திமுகவை வைத்துக்கொண்டு பாராளுமன்ற தேர்தலில் வெல்ல முடியாது என கணித்திருக்கிறார்கள், விரைவில் இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை நிதிஷ்குமார் வெளியேற்றுவார்” என்று விமர்சித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com