கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கான தீர்மானம்: பாஜக வெளிநடப்பு முதல் கூட்டணி கட்சிகளின் ஆதரவு வரை...!

கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் அரசின் சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் தனித்தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்PT

கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய அரசை வலியுறுத்திடும், அரசின் தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழியப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த தீர்மானத்தை எதிர்த்து, பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். ஆனால் மற்ற கட்சியினர் ஆதரவு தெரிவித்து தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

முக ஸ்டாலின்
“மதம் மாறினாலும் சாதி மாறுவதில்லை; சாதிய இழிவுகள் ஒழிவதில்லை!”- பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரை!

அந்தக் கருத்துகளை இங்கே பார்ப்போம்...

“சமூக நீதி யாருக்கு மறுக்கப்பட்டாலும் அதை பெற்றுத் தரவேண்டும்” - வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி

“சமூகநீதி சமநீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காக கலைஞரின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவாக இத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவ்விவகாரத்தில் கடந்த காலங்களில் இருந்து இருக்கின்ற சட்டப் பிரச்னைகளும், மதம் மாறினார்கள் என்பதற்காக தொடர்ந்து ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு சமூக நீதி மறுக்கப்படுவதும் குறிப்பிடப்பட்டு அவை எதிர்க்கப்பட்டுள்ளது.

வேல்முருகன்
வேல்முருகன்டிவிட்டர்

சமூகநீதி இம்மண்ணில் எவருக்கு மறுக்கப்பட்டாலும், அதை பெற்று தருவது திமுக ஆட்சியின் பணி என்ற நோக்கில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்”

“இருவிதமான சலுகைகள் இருந்தால் பாகுபாடுகள் தலைதூக்கிவிடும்” - ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

“விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை கை கொடுத்து தூக்கி விட வேண்டும் என்றும், பொருளாதாரத்தில் ஒரு சமநிலையை அடைந்து விட வேண்டும் என்றும் முதலமைச்சராக ஸ்டாலின் அவர்கள் எடுத்திருக்கிற இந்த முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள். அதே சமயத்தில் இந்த மண்ணிலே வாழ்கின்ற அத்தனை மக்களும் சாதி வேறுபாடுகளை கலைந்து, சாதிகள் அற்ற ஒரு சமுதாயமாக, தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சாதிகள் இல்லாத ஒரு சமுதாயத்தை கட்டமைக்க தொடர்ந்து நாம் முயற்சி கொண்டு இருக்கிறோம்.

ஈஸ்வரன்
ஈஸ்வரன்டிவிட்டர்

ஆனால் ஒரு பிரிவில் இருக்கிற மக்களுக்கு இருவிதமான சலுகைகள் இருக்கும் பொழுது சாதி பாகுபாடுகள் தலைதூக்கி விடுமோ என்ற அச்சத்தையும் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்து அமர்கின்றேன்”

“அரசின் தீர்மானம் படி சலுகைகள் கிடைக்கவேண்டும்” - சதன் திருமலைக்குமார், மதிமுக

“தலித் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவர்களாக மாறினால் வேலைவாய்ப்பில் எந்த ரிசர்வேஷனும் கிடையாது என்ற நிலையை மாற்றி அவர்களுக்கு ஒதுக்கீடுகள் கொடுக்க வேண்டும். எத்தனை சதவீதம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளதோ அதையே இவர்களுக்கும் வழங்க வேண்டும் என தனி தீர்மானம் கொண்டு வந்ததை மதிமுக சார்பில் வரவேற்கிறோம்”

“மதம் மாறினார்கள் என்பதற்காக சமூகநீதி மறுப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை”- ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

“கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் இன்று வரை கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் பின்தங்கியே இருக்கிறார்கள். மதம் மாறினார்களே தவிர வாழ்க்கைப் பொருளாதாரம் உயரவில்லை. கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள் என்பதற்காக அவர்களுக்கான சமூகநீதியை மறுப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்twitter

மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர்களுக்கும், இந்திய அரசியலமைப்பின் சட்டத்தில் உள்ள உரிமைகளும், இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் கொண்டு வந்த இந்த தனி தீர்மானம் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வரவேற்கிறோம்”

“சமூக நீதி சமநீதியாக வழங்கப்பட்டுள்ளது” - ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி

“சமூக நீதியை சம நீதியாக வழங்குவது தான் திராவிட மாடல் ஆட்சி என்று நிரூபித்துள்ளது அரசு. நீண்ட நெடிய காலமாக தமிழ்நாட்டில் வாழ்கின்ற தலித் கிறிஸ்தவர்களுடைய கோரிக்கையை, திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதி படி, தலித் கிறிஸ்துவர்களை பட்டியலின சாதியில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமார வரவேற்கின்றேன்”

“பாகுபாடு இன்று உடைந்துள்ளது” - சின்னதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

“ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் பங்கு கொண்டு எம்பிக்களின் கருத்துக்களை ஏற்று, உடனுக்குடன் பல அறிவிப்புகளை செய்வது உண்மையிலேயே பாராட்டை பெற்றுள்ளது. வைக்கம் நூற்றாண்டு விழா, பெரியவர் இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணையம் என பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளது.

சின்னதுரை
சின்னதுரைFB

இந்த நிலையில், தமிழ்நாடு தலித் ஆதிதிராவிடர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையே என்றும், இந்து ஆதிதிராவிடர்களுக்கும், கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் இடைவெளி என்பது அதிகரித்துள்ளது என்றும், இந்தியாவிலேயே நாம் புறக்கணிக்கப்படுகிறோமோ என்ற வேதனையிலும் இருந்து வந்தார்கள், கிறித்துவ ஆதிதிராவிடர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது தொடர்ந்து வலியுறுத்தி வந்த இந்த கோரிக்கையை, முதலமைச்சர் தனித் தீர்மானமாக கொண்டு வந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்”

“சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளைச் சாதியின் பெயரால் கொடுப்பதே சரி” - முதலமைச்சர் முக ஸ்டாலின்

“நான் முன்மொழிந்துள்ள தீர்மானத்தை கண்டித்து பேசி பா.ஜ.கவினர் வெளிநடப்பு செய்துள்ளார்கள். தீர்மானத்தை ஏனோ தானோ என்று நாங்கள் கொண்டு வரவில்லை. இந்த தீர்மானத்திற்காக பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்பு, சட்ட வல்லுநர்களுடன் பேசிய பிறகு தான் நானும் இந்த தீர்மானத்தை முன்மொழிந்துள்ளேன்.

இந்த தீர்மானத்தை முறையாகவே நாங்கள் முன்மொழிந்திருக்கின்றோம் என்பதை மீண்டும் உறுதி செய்கிறோம். சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளைச் சாதியின் பெயரால் கொடுப்பதே சரி!” என்று தெரிவித்தார். அதற்கு பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com