தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் உத்தமபாளையத்தில் 24 சென்டிமீட்டர் மழையும், காங்கேயத்தில் 12 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஓகேனக்கலில் 5-வது நாளாக பரிசல் இயக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. காவேரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால், பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் கும்பக்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
கொடைக்கானல் பகுதியில் பெய்த கனமழையால் மலைச்சரிவுகள் மற்றும் மலைப்பாதையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அண்மைக்காலமாக வறண்டு காணப்பட்ட மூலையாறு, தலையாறு, மற்றும் குதிரையாறில் வெள்ளம் போல் தண்ணீர் செல்வதால் அதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

