”இதுதான் நடந்த உண்மை” வெளிநாட்டு தமிழர் கேள்வி: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் PTR விளக்கம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
பி.டி.ஆர்., அண்ணாமலை
பி.டி.ஆர்., அண்ணாமலைட்விட்டர்

அயலக தமிழர்கள் மாநாட்டில் அமைச்சருடன் வாக்குவாதம்

சென்னை நந்தம்பாக்கத்தில் ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்ற அயலக தமிழர்கள் மாநாட்டில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு உரையாற்றினார். வெளிநாடுவாழ் தமிழர் ஒருவருக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வெளிநாட்டுத் தமிழர் எழுந்து, “பல மொழிகளை பயிற்றுவிக்கும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை தமிழக அரசு ஏன் தடுக்கிறது” என்ற கேள்வியை முன்வைத்தார்.

பதிலளித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

இதற்குப் பதிலளித்த பிடிஆர், ”சிபிஎஸ்இ பாடத்திட்டம் மத்திய வாரியத்தால் செயல்படுத்தப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்திற்கு என ஒரு கல்விக்கொள்கை உள்ளது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் தழைத்தோங்க வைக்க வேண்டும் என்பதற்காக இந்த கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். அமைச்சர் பதில் அளித்துக் கொண்டிருக்கும்போதே கேள்வி எழுப்பிய நபரை வெளியேற்றும் முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு அந்த நபர், ’தம்மை வெளியேற்றுவது ஜனநாயக முறையில்லை என்றும், தமது பெயரும் கருணாநிதிதான்’ என்றும் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

வீடியோவைப் பகிர்ந்து அண்ணாமலை கண்டனம்

இதுதொடர்பான வீடியோவைப் பகிர்ந்து கண்டனம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு ஏன் எதிராக உள்ளது என கேள்வி கேட்டவருக்கு பதில் அளிக்காமல், தங்களின் தவறான கொள்கையை அம்பலப்படுத்தினார் என்பதற்காக அமைச்சரால் மிரட்டப்பட்டு அரங்கைவிட்டு வெளியேற்றப்பட்டார்” என்று குற்றம்சாட்டினார்.

அண்ணாமலைக்கு பதில் அளித்த அமைச்சர்!

இந்த நிலையில் இதற்கு பிடிஆர் தம்முடைய எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், “முதல் பாதியை மட்டும் பார்த்தவர்களுக்காக இரண்டாம் பாதிக்கான வீடியோவை இணைத்துள்ளேன். அண்ணாமலை அரை உண்மைகள், திரிக்கப்பட்ட விஷயங்கள் மற்றும் முழுப் பொய்களையும் பரப்பி தமிழகத்தில் தனது பிரசாரத்தை மேலும் தொடர நினைக்கிறார். தான் பதிவுபோடும் முன்பு அதில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்ற அக்கறையெல்லாம் அவருக்கு கிடையாது. அரங்கில் இருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை. அந்த நபர் தனது இருக்கைக்குத் திரும்பி, எனது அமர்வு முடியும்வரை அங்கேயே இருந்ததோடு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த அமர்வுகளிலும் கலந்துகொண்டார். இவரைப்போல எத்தனையோ பாஜக தலைவர்கள் வந்துசெல்லலாம்... ஆனால் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை திணிப்பை ஏற்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுவாழ் தமிழருக்கும் பதில் அளித்த அமைச்சர்

மேலும் பிடிஆர் இணைத்துள்ள இரண்டாவது பாதி வீடியோவில் கேள்வி கேட்ட அந்த நபருக்குப் பதில் சொல்வது உள்ளது. அதில், “அந்த நபர் அமெரிக்காவின் சிகாகோவில் வசிக்கிறார். சிகாகோவில் பள்ளிக் கல்வி பாடத்திட்டம் நகர பள்ளி வாரியத்தால் வகுக்கப்படுகிறது. நகர பள்ளி வாரியம் இருக்கும் இடத்தில் அவர் ஏன் வசிக்கிறார்? அவர்தான் இங்கு வந்து சிபிஎஸ்இ கல்வி வேண்டும் என்று கூறுகிறார்” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் தாங்கள் என்ன மொழியை விரும்பினாலும் படிக்கலாம் என்று தெரிவித்த பிடிஆர், தான் தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் படித்ததாகவும் தமிழுடன் கூடுதலாக பிரெஞ்சு மொழியை கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் தனது குழந்தைகளும் பிரெஞ்சு படித்ததாக கூறிய அவர், தமிழ்நாட்டில் யாரையும் எந்த மொழியையும் கற்கவேண்டாம் என தடுக்கவில்லை என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com