அரசுப்பள்ளியை தத்தெடுத்து உதவும் காவலர்கள் : குவியும் பாராட்டு

அரசுப்பள்ளியை தத்தெடுத்து உதவும் காவலர்கள் : குவியும் பாராட்டு
அரசுப்பள்ளியை தத்தெடுத்து உதவும் காவலர்கள் : குவியும் பாராட்டு

சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றை தத்தெடுத்து மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரும் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னை திருமங்கலத்தில் அரசுப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளி ஆரம்பப்பள்ளியாக 1966 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர் 2002ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 135 மாணவர்கள் 8 ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்நிலையில், அரசுப்பள்ளியை தத்தெடுக்கும் புது யோசனையை சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முன் வைத்தார். அதன்படி அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி மற்றும் காவல் ஆய்வாளர் ரவி ஆகியோர் கனவை நனவாக்கினர். குறிப்பிட்ட அரசுப்பள்ளியை தத்தெடுத்து மாணவர்களின் சிறு சிறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

அதாவது, போலீசார் மேசைகள், நாற்காலிகள், தட்டுகள், பீரோ ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளனர். மேலும், ஏழை மாணவர்கள் சிறந்த வசதிகளை பெறுவதற்காக நிதி திரட்டுவதன் மூலம் பள்ளி கட்டிடத்தின் மறுசீரமைப்பு பணிகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு காவல் ஆய்வாளர் ரவி அளித்த பேட்டியில், “மாணவர்களுடன் கலந்துரையாட இது ஒரு நல்ல வாய்ப்பு. மக்களும் குழந்தைகளும் எங்களை கண்டு பயப்படத்தேவையில்லை. அனைவரும் சட்டம் மற்றும் ஒழுங்கை கடைபிடிக்க இது உதவும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஷ்வரி கூறுகையில், “ நாங்கள் கோரிய சிறிய கோரிக்கைகளை கூட போலீசார் பூர்த்தி செய்கின்றனர். தற்போது சிறந்த வசதிகளுடன், மாணவர்கள் படிப்பில் சிறப்பாக கவனம் செலுத்த முடிகிறது. பள்ளிக்கு விரைவில் புதிய நூலகம் ஒன்று வர உள்ளது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு பள்ளி வளாகத்தில் பாட்டில்களை உடைத்துவிட்டு செல்லும் அவலநிலை தொடர்ந்ததாகவும் சமூக விரோத சக்திகளுக்கு இது ஒரு இடமாக இருந்தது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com