கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் துன்புறுத்தல் புகார்

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் துன்புறுத்தல் புகார்

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் துன்புறுத்தல் புகார்
Published on

சமீபத்தில் வெளிவந்த ’96’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் பாடல் பாடியுள்ளவர் பாடகி சின்மயி. தனது வசீகர குரலால் அனைவரையும் ஈர்த்தவர். அவரது ட்விட்டர் பக்கத்தில் சில நாள்களாக அவர் பகிர்ந்து வரும் விஷயங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக, கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக அவர் பகிர்ந்த விஷயங்கள் தற்போது விவாதப் பொருள் ஆகியுள்ளது

பெண்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களால் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை பேசும் ஒன்றாக #MeToo என்ற பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் பெண்கள் செய்த பரப்புரை இப்போது இந்தியாவிலும் பேசப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் சில பெண்கள் கவிஞர் வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் ’டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு பேசிய சின்மயி “வைரமுத்துவால் எனக்கும் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டது. சுவிட்சர்லாந்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது நான் இதனை உணர்ந்தேன். மிகுந்த பயம் என்னை ஆட்கொண்டது. பின் வைரமுத்துவுடன் இருப்பதை நான் தவிர்த்தேன். என்னை அவரது ஹோட்டல் அறைக்கு அழைத்தார். ஆனால் நான் மறுத்து விட்டேன். அவரது அலுவலக அறையில் இரண்டு பெண்களை அவர் முத்தமிட முயற்சித்திருக்கிறார்” எனத் தெரிவித்தார். 

மேலும் பேசிய சின்மயி, “ என்னை போன்ற இன்னும் பல பெண் பாடகர்கள் இது குறித்து பேசுவார்கள் என நம்புகிறேன். வைரமுத்துவின் அதிகார பலத்தை கண்டு இதனை வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் இதுவே நேரம், அனைவரும் பேச வேண்டும்; ஏனெனில் பலரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்” என்றார்.

சி.என்.என். தொலைகாட்சிக்கு பேசிய சின்மயி “எந்த விளம்பரத்துக்காவும் இதனை நான் செய்ய வேண்டிய அவசியமில்லை. பாதிகப்பட்ட மற்றவர்கள் இதனை பேசுவதில் பல தடைகள் உள்ளன. எனக்கு வரும் காலங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் யாரோ ஒருவர் பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அரசியல் ரீதியாக கூட எனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படலாம்” என்றார்

சின்மயி தெரிவித்த புகார் குறித்து கவிஞர் வைரமுத்துவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயற்சித்தோம். ஆனால் அவரது தரப்பில் இருந்து இப்போது வரை விளக்கம் பெற முடியவில்லை. அவரது கருத்துக்கள் கிடைக்கும் பட்சத்தில் அதுவும் கட்டுரையாக வெளியிடப்படும்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com