இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன ‘தமிழ் வாழ்க’ ஹேஷ்டேக்

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன ‘தமிழ் வாழ்க’ ஹேஷ்டேக்
இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன ‘தமிழ் வாழ்க’ ஹேஷ்டேக்

மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து #தமிழ்_வாழ்க என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

17 ஆவது மக்களவையின் புதிய எம்பிக்கள் பதவியேற்பு விழா இரண்டாவது நாளாக இன்றும் நீடித்தது. இன்றைய நிகழ்வில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 39 எம்பிக்களும் பதவியேற்றனர். அனைவரும் தமிழ் மொழியிலேயே பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

முதலில் பதவியேற்று கொண்ட திருவள்ளூர் தனி தொகுதி எம்பி ஜெயக்குமார் அம்பேத்கர் வாழ்க என முழங்கினார். தொடர்ந்து வடசென்னை தொகுதி எம்பி கலாநிதி வீராசாமி, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் தமிழ் மொழியில் பதவியேற்றனர். தருமபுரி தொகுதி எம்பி செந்தில்குமார் கருப்பு சட்டை அணிந்து வந்து பதவியேற்றதோடு திராவிடம் வாழ்க என மு‌ழக்கமிட்டார். 

தயாநிதிமாறன் தமிழ் வாழ்க , பெரியார் வாழ்க, கருணாநிதி வாழ்க என முழக்கினார். விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் வெல்க தமிழ், வாழ்க அம்பேத்கர் எனக் கூறி பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். திமுக எம்பிக்கள் எஸ் ஆர் பார்த்திபன், கவுதம் சிகாமணி ஆகியோர் வாழ்க தளபதி என முழக்கமிட்டனர். ஈரோடு எம்பியான கணேசமூர்த்தி தமிழ்நாடு என் தாய்நாடு, தாய்நாட்டின் உரிமை காப்போம் எனக் கூறி பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். எம்பிக்கள் சண்முகசுந்தரம், ஜோதிமணி ஆகியோர் தமிழ் வாழ்க என முழக்கம் எழுப்பினர். ‌

பெரம்பலூர் தொகுதி எம்பியாக பதவியேற்றுக் கொண்ட பாரிவேந்தர் தமிழ் வாழ்க; இந்தியாவும் வாழ்க எனக் கூறி பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். தமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது பாஜக எம்பிக்கள் ஜெய் ஸ்ரீராம் எனவும், பாரத் மாதா கீ ஜே எனவும் கோஷமிட்டனர்.

இந்நிலையில் தமிழக எம்பிக்களின் பதவியேற்பு விழா காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழ் மொழியில் பதவியேற்ற எம்பிக்களுக்கு பலரும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். மேலும் #தமிழ்_வாழ்க என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com