இயற்கை வளங்களின் கொள்ளையை ஒடுக்குங்கள் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
இயற்கை மற்றும் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சட்டவிரோதமாக கருங்கல் வெட்டி எடுத்ததாக மாவட்ட ஆட்சியர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி சுப்பாரெட்டி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக எவ்வித கருணையும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், ''அரசு தனது கடமையில் இருந்து தவறிவிட்டது. இதை சகித்துக் கொள்ள முடியாது. சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக எந்த கருணையும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் செல்வாக்கானவர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கனிம வளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
நீதிபதி தனது உத்தரவில் ''இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் அனுப்பிய நோட்டீசுக்கு வழக்கு தொடர்ந்த சுப்பாரெட்டி விளக்கமளிக்க வேண்டும். விளக்கத்தின் அடிப்படையில் சட்டப்படி விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முடிவெடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் 6 வாரத்தில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கும், சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் ஆட்சியருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.