ஊட்டச்சத்திற்கான மத்திய அரசின் திட்டமான ‘போஷன் அபியான்’ திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
நாட்டிலிருக்கும் குழந்தைகள், பெண்கள் ஆகியவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க மத்திய அரசு ‘போஷன் அபியான்’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் மாநில மக்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது.
இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில் இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அத்துடன் இதனை மக்களிடம் கொண்டு சேர்த்தது மற்றும் சிறப்பான பயிற்சி வழங்கிய பிரிவிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மேலும் ஒன்று இணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகளில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு தமிழ்நாட்டிற்கு பரிசுத் தொகையாக 3 கோடி ரூபாய் அளிக்கப்படவுள்ளது. இதனை வரும் வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெறும் விழாவில் மத்திய அரசு கொடுக்க உள்ளது.