காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பணிக்கு திரும்பும்வரை அவர் பணிகளை கவனிக்கிறார் சைலேந்திரபாபு?
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பணிகளை டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையின் காவல் ஆணையர் பொறுப்பு முக்கியமாக பார்க்கப்படுவதால், அதனை தற்போது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை காவல்துறை உயர் அதிகாரிகள் இது தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. சென்னை காவல் ஆணையரகத்தில் மேற்கொள்ளப்படும் அன்றாடப் பணிகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபுவிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சங்கர் ஜிவால் மீண்டும் பணிக்கு திரும்பும்வரை இந்த சைலேந்திரபாபு பணிகளை மேற்பார்வை செய்து கவனிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் விரைவில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

