எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: கைது செய்யப்பட வாய்ப்பு
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக் பக்கத்தில் இழிவான கருத்தை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதேசமயம் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பலரும் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதுதொடர்பான வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும், இன்றே சரணடைய உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. தவறு என்று தெரிந்ததும் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பதிவை நீக்கிவிட்டார் என்றும், இணைப்பு மனுக்களில் பதிலளிக்கும் வரை கைது செய்யக் கூடாது என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது, இதேபோன்ற குற்றச்சாட்டு மற்ற பொதுமக்களுக்கு எதிராக வரும் போது எடுக்கப்படும் நடவடிக்கைக்கும், சேகர் மீதான புகாருக்கும் பாரபட்சம் காட்டப்படுகிறதோ என்று நீதிபதி எஸ்.ராமத்திலகம் கேள்வி எழுப்பினார். ஊடகத்தினர் கைது செய்யப்படும்போது, சேகர் மட்டும் ஏன் வேறு விதமாக கையாளப்படுகிறார் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதியும் வழங்கியுள்ளது. முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால் எஸ்.வி.சேகர் எந்நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.