எஸ்.வி. சேகர் வழக்கு; 18ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
பெண் செய்தியாளர்கள் குறித்து ஆபசமாக, அவதூறாக பேசியதற்காக நடிகர் எஸ்.வி. சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. சாட்சிகள் விசாரிக்கப்பட்ட பிறகு வரும் 18ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
நடிகர் எஸ்.வி. சேகர். அண்மையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் ஆபாசமாக, அவதூறாக பதிவிட்டிருந்தார். இதற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது. பத்திரிகையாளர் சங்கங்கள் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். வழக்குப் பதியப்பட்ட நிலையில், தமிழக போலீஸாரால் இன்னும் எஸ்.வி. சேகர் கைது செய்யப்படாமல் உள்ளார்.
இந்நிலையில், இந்தியக் குடியரசு கட்சியின் அத்துவாலே பிரிவு மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் நீதிமன்றத்தில் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக, ஆபாசமாக பேசிய எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கரூர் 2 வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நடுவர் சுப்பையா வழக்கு விசாரணையை நடத்தினார். இந்த வழக்கு தொடர்பாக 2 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து வரும் 18 ம் தேதிக்கு இந்த வழக்கை நீதிமன்ற நடுவர் ஒத்திவைத்தார்.