பெண்களின் உணர்வுகளை நோகடிப்பதும் கொலை தானே?

பெண்களின் உணர்வுகளை நோகடிப்பதும் கொலை தானே?
பெண்களின் உணர்வுகளை நோகடிப்பதும் கொலை தானே?

பெண்களுக்கு திறமை கிடையாது.. ஒரு வேளை ஒரு துறையில் அவள் வளர்ச்சி பெற்றிருந்தால், அது இப்படிதான் இருந்திருக்கும்.. அப்படித்தான் நடந்து கொண்டிருப்பாள்.. என்று மிக எளிதாக பேச கூடிய எத்தனையோ எஸ்.வி.சேகர்கள் இருக்கதான் செய்கிறார்கள். சாதாரணமான ஒரு தெரு சண்டையில் கூட நீ அவள் மகன், உன் பொண்டாட்டி இப்படி, உன் சகோதரி அப்படி என வாய்கூசாமல் சட்டென்று பெண்களையே இழிவுப்படுத்த கூடிய சமூகத்தில்தான் நாம் இருக்கிறோம். பெண்கள் என்றால் அவ்வளவு கேவலமா? போகிற போக்கில் பேசிவிட்டு பின்பு ஐ யாம் சாரி என்றால்…? 
ஒவ்வொரு மார்ச்-8 க்கும் ஒரு வாழ்த்து செய்தி பதிவிட்டு பெண்மையை போற்றிவிட்டால் போதுமா? நாளெல்லாம் பெண்களைப் போற்ற வேண்டும் என்று கூறவில்லை.. அவளை தூற்றாமல் இருந்தாலே போதுமானது. 

இங்கு பேசப்படும் கெட்ட வார்த்தைகள் கூட பெண்களை மையப்படுத்தியே இருக்கின்றன இல்லை என்றால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உடல்ரீதியாக மணிக்கு இவ்வளவு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று எத்தனையோ புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் உணர்வு ரீதியாக நொடிக்கு எத்தனையோ பெண்கள் மனரீதியான துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்பதை எந்தப் புள்ளி விவரங்களாலும் கூட அளவிட முடியாது. 

குடும்பத்தை வழி நடத்துவது முதல்… வேலைக்குச் சென்று ஒரு துறையில் முன்னேறுவது வரை… ஒரு பெண்ணாக உடல் ரீதியாக… உணர்வு ரீதியாக… எண்ணிலடங்கா பிரச்சினைகளை பெண்கள் சந்திக்கதான் செய்கிறார்கள். ஒரு பெண் ஒரு துறையில் முன்னேறி வருகிறாள் என்றால் அதற்கு பின்னால் அவளுடைய திறமை, உழைப்பு என ஒரு ஆணுக்கு நிகரான அத்தனை சவால்களையும் சந்தித்துதான் வருகிறாள்.

இதையெல்லாம் அறிந்தும் பெண் என்பவள் உடலை மட்டுமே மூலதனமாக கொண்டு தவறான வழியில் தனக்கான வாய்ப்பை பெறுகிறாள் என்று கூறுவது எவ்வளவு பெரிய அநியாயம். இது போன்று கருதுவதும் கருத்து கூறுவதும் பெண்களை வார்த்தைகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதற்கு சமம். எஸ்.வி.சேகர் தான் இட்ட பதிவுக்கு விளக்கம் தரும் போது, யார் தான் தவறு செய்யவில்லை? தவறு செய்வது இயல்பு. அதுதான் மன்னிப்பு கேட்டுவிட்டேனே என்கிறார்.
 
இது… கொலை செய்துவிட்டு கொலையுண்டவரிடம் மன்னிப்புக் கேட்பது போல் இருக்கிறது. ஒருவரின் உணர்வுகளை நோகடிப்பதும் கொலை தானே! நீங்கள் தற்போது கொலையுண்டவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறீர்கள் கொலையுண்டவர்கள் எப்படி மன்னிக்க முடியும்? 

(கட்டுரையாளர்: சரண்யா)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com