மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழி - மருத்துவர் ஓட்டி வந்த கார் விழுந்து விபத்து

மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழி - மருத்துவர் ஓட்டி வந்த கார் விழுந்து விபத்து
மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழி - மருத்துவர் ஓட்டி வந்த கார் விழுந்து விபத்து

சென்னை அடையாறில் அமைக்கப்பட்டு வந்த மழைநீர் வடிகால் பணிக்கான பள்ளத்தில், எஸ்யூவி கார் ஒன்று தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக அந்த காரை ஓட்டி வந்த மருத்துவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டில் பெய்த கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடக தத்தளித்தது. இந்த வெள்ள பாதிப்புகளை சென்னைவாசிகள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வெள்ள சுவடு மறைந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆண்டு திடீரென வடகிழக்கு பருவமழை விடாமல் வெளுத்து வாங்கியதால் சென்னை மாநகரம் மீண்டும் தத்தளித்தது. அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நவம்பர் மாதத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.

வெள்ளம் ஏற்பட்டு 6 ஆண்டுகள் ஆன நிலையிலும், மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படாததே வெள்ளநீர் தேங்கக் காரணம் என அப்போது மக்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து இனி எப்போதும் சென்னையில் மழைநீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், சென்னை மாநகரத்தின் பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதேபோல் அடையாறு பகுதியிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டு நேற்று கட்டுமானப் பணிகள், மாநகராட்சி சார்பில் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இந்த மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் மருத்துவர் ஒருவர் ஓட்டி வந்த எஸ்யூவி கார் எதிர்பாரதவிதமாக தலைகுப்புற விழுந்து சிக்கிக் கொண்டது. நல்வாய்ப்பாக காரில் இருந்த மருத்துவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். பலமணிநேர போராட்டத்திற்குப் பின்னர், காவல்துறையினர் போராடி குழிக்குள்ளிருந்து காரை வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட விடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில் மாநகராட்சி அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், நடப்பாண்டு பருவமழையை சிறப்பாக கையாளும் வகையில், நகரின் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், வரும் அக்டோபர் மாதத்திற்குள் இந்தப் பணிகள் நிறைவடைந்து விடும் என்றும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com