சென்னை உயர் நீதிமன்றம்| புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு.. யார் இந்த சுஷ்ருத் அரவிந்த்..?
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய அவர், மத்திய பிரதேசத்தில் வழக்கறிஞராக தனது பயணத்தைத் தொடங்கினார். குடியரசுத் தலைவர் உத்தரவின் பேரில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.
இதுவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய எம் எம் ஸ்ரீவஸ்தவா மார்ச் 5ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதை அடுத்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் சுஷ்ருத் அரவிந்தை பரிந்துரைத்துள்ளது.
யார் இந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி..?
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி. இவர் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து 1992ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை வருமான வரித்துறை, வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றிய அவர் 2016ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2018ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது.
புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்பு..
இந்த பரிந்துரையை ஏற்று நீதிபதி தர்மதிகாரியை, புதிய தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்நிலையில் கிண்டி மக்கள் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

