”விசாரணைக்கு வருவதை விட பைபாஸ் அறுவை சிகிச்சை..” .. அமலாக்கத்துறை Vs செந்தில் பாலாஜி தரப்பு வாதம்!
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதையும் மூன்றாவது நீதிபதி வழங்கிய தீர்ப்பு குறித்த விவரங்களையும் எடுத்துரைத்தார. மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களால் கிரிமினல் குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவு 167 இன் கீழ் யாரையும் கைது செய்து காவலில் எடுக்க முடியாது. அப்படி கைது செய்யப்படும் நபரை நீதிமன்ற காவலுக்கு மட்டும் தான் அனுப்ப முடியும் என வாதிட்டார்.
அதுவும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது என்றால் நீதிமன்ற காவலுக்கும் அனுப்ப முடியாது. இரண்டில் ஏதாவது ஒன்றை தான் கணக்கில் கொள்ள முடியும் என்று வாதம் முன் வைத்தார். மேலும் செந்தில் பாலாஜிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் இருப்பதால் நீதிமன்ற காவல் வழங்குவதிலிருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா ஒரு நபரை கைது செய்வது என்பது விசாரிப்பதற்காக தானே தவிர அவரை வெறுமென நீதிமன்ற காவலில் வைப்பதற்கு கிடையாது. அப்படி வைப்பதில் எந்தவிதமான பலனும் இல்லை. மேலும், கைது என்பது ஒரு குறிப்பிட்ட தேவைக்காகத்தான்;
இதே விவகாரத்தில் ஜாமீன் பெறுகிறார்கள் என்றால் கைது செய்த அதிகாரிகளை காவல்துறை அதிகாரிகளாக தான் பார்க்க முடியும். இது தொடர்பான ஏராளமான வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பும் வழங்கி இருக்கிறது.
மேலும், 15 நாட்களுக்கு மேலாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தாலும் சிகிச்சைக்கு பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றம் கொடுத்த அதிகாரத்தை எப்படி அவர்களால் மறுத்து பேச முடியும். விசாரிப்பது என்பது எங்களது கடமை மட்டும் கிடையாது, சட்ட உரிமையும் கூட என அமலாக்கத்துறை வாதிட்டது.
சில சமயங்களில் விசாரணைக்கு வருவதை விட பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்வது சிலருக்கு சுலபமாக இருக்கிறது என செந்தில் பாலாஜி தரப்பை அமலாக்கத்துறை தரப்பு கிண்டல் செய்யும் தொணியில் பேசியபோது, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்ததோடு, சில சமயம் உங்களுக்கு சட்டத்தை மதிப்பதை விட அதை மீறுவது விருப்பமானதாக இருக்கிறது என பதிலளித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் அதற்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிப்பதாகவும் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றம் அடுத்த விசாரணையை நடத்தும் வரை காவலில் எடுத்து விசாரிக்க இடைக்கால தடை வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கேட்டபோது அடுத்த விசாரணை வரை எதுவும் நடக்காது என உறுதியளித்து வழக்கை ஜூலை 26 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.