\
மேகமலை விவகாரம் - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
மேகமலை விவகாரம் - உச்சநீதிமன்றம் எச்சரிக்கைweb

‘தமிழ்நாட்டிற்கு ராணுவத்தை அனுப்புவோம்..’ தமிழக அரசுக்கு எச்சரிக்கை! என்ன நடந்தது?

மேகமலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாவிட்டால் துணை ராணுவத்தை தமிழ்நாட்டிற்கு அனுப்ப நேரிடும் என உச்ச நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
Published on
Summary

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள 4600க்கும் மேற்பட்ட குடும்பங்கள், இலவம்பஞ்சு தோட்டங்கள், விடுதிகள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்ற உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் துணை ராணுவப்படையை அனுப்ப வேண்டிய நிலை வரும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

மாஞ்சோலை, மேகமலை அதை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய மனு மற்றும் மாஞ்சோலையில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யக்கோரி ஜான் கென்னடி என்பவர் தொடர்ந்த மனு ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். தமிழக அரசின் சமூக நீதி அமைச்சகம் தரப்பு வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் 4600 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அங்கு பல ஏக்கர் நிலங்களில் இலவம்பஞ்சு பயிரிடப்பட்டுள்ளது.அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவர்களில் சில குடும்பங்கள் பல தலைமுறையாக அந்த பகுதியிலேயே வசித்து வருபவர்கள், எனவே அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதன் பின்னர் அவர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள்.

பழங்குடியினர் அல்லாமல் நூறாண்டுகளுக்கு மேலாக அங்கு வசித்து வருபவர்களுக்கு சில தளர்வுகள் தேவைப்படுகிறது அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இயங்கி வந்த விடுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன, ஆக்கிரமிப்பு இடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்த காலம் தேவைப்படுகிறது, எனவே அதற்காக மூன்று மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள விடுதிகளை மூடினால் மட்டும் போதாது முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் வனப்பகுதியில் அனுமதிக்க முடியாது என  தெரிவித்தனர். அதைப்போல் இலவம்பஞ்சு பயிரிடப்பட்டுள்ள அந்த நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட வேண்டும் அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு இலவம்பஞ்சு தோட்டங்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். ஏனெனில் இலவம் பஞ்சு தோட்டங்களில் பணிபுரிவதற்காக வேலையாட்களை குடி அமர்த்தும் நடவடிக்கையில் இருந்து தான் ஆக்கிரமிப்பு என்பது தொடங்குகிறது. எனவே இந்த விஷயத்தில் எந்த ஒரு சலுகையும் காட்டக்கூடாது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி புலிகள் சரணாலயம் பகுதியில் இருக்கும் இந்த தோட்டங்கள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் இதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது.

அதுபோல ரிசர்வ் வனப் பகுதிகளில் எந்த காரணம் கொண்டும் எவருக்கும் நிலத்துக்கான பட்டா வழங்கக் கூடாது.மேலும் ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், துணை ராணுவப்படையை அனுப்ப வேண்டியது வரும் என எச்சரித்தனர்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்pt web

அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பரமேஸ்வர், புலிகள் சரணாலயம் அமைந்துள்ள இந்த காட்டுப் பகுதிகளில் இன்னும் பல ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பல ஒய்வு பெற்ற அதிகாரிகள் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக அந்த அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அளித்தும் எந்த ஒரு பதிலும் இல்லை. ஆக்கிரமித்துள்ள நிலங்கள் தொடர்பாக ஒய்வு பெற்ற அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்ப வந்துள்ளன என சுட்டிக்காட்டினார்.

மேகமலை
மேகமலை

இதனை தொடர்ந்து நீதிபதிகள், மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். இலவம் பஞ்சு தோட்டங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும், ஏனெனில் ஆக்கிரமிப்புக்கான மிக முக்கிய காரணமானவர்களே அந்தத் தோட்ட உரிமையாளர்கள் தான் என திட்டவட்டமாக மீண்டும் தெரிவித்தனர். மேலும் நிலங்களை ஆக்கிரமித்துள்ள யாராக இருந்தாலும் அவர்களின் கட்டிடங்களுக்கான மின்சாரம், நீர் இணைப்பு உள்ளிட்டவத்தை துண்டியுங்கள் எனவும் அறிவுறுத்தினர். இதனை அடுத்து மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் அதை சுற்றிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தொடர்பாக நிலை அறிக்கையை இரண்டு வார காலத்தில் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com