கைவருமா காவிரி நீர்..?: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
தமிழகத்தின் பிரதான பிரச்னைகளில் ஒன்றான காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் நீண்ட கால பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் அமிதவ ராய், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டன. இந்த வழக்கில் 4 மாநிலங்களும் தங்கள் தரப்பு வாதங்கள், ஆவணங்கள், நீர்வள நிபுணர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் முன் வைத்தன. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த செப்டெம்பர் 20-ஆம் தேதி மறு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. 150 நாட்களுக்குப்பிறகு, காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
1991-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை காவிரி நதிநீர் பிரச்னை முடிவு காணா பிரச்னையாக நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அவசியம் என்றும், ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தது. இதனால் இன்றைய தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புதான் இறுதித்தீர்ப்பு என்று ஏற்கனவே நீதிபதிகள் உறுதிபட தெரிவித்திருந்ததால், இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.