மருத்துவ மேல்படிப்பு இடஒதுக்கீடு.. உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு - தமிழக மாணவர்களுக்கு பாதிப்பா?
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சண்டீகர் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்த மேல்முறையீட்டு மனு விசாரணை ரிஷிகேஷ், சுதான்ஷு, எஸ். வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தி வந்த நிலையில் தீர்ப்பளித்துள்ளது.
இதில், இந்தியாவின் ஒரு குடிமகனாக எங்கு வேண்டுமானாலும் வசிக்கவும், கல்வி பயிலவும் உரிமை உள்ளது என கூறிய நீதிபதிகள், இளநிலை படிப்பில் குறிப்பிட்ட அளவில் அந்த மாநிலத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம், ஆனால், முதுநிலை மருத்துவப் படிப்பில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அடிப்படை உரிமையை பறிப்பது ஆகும் என்றும், அரசமைப்புச் சட்டப் பிரிவு 14- க்கு எதிரானது என்றும் தெரிவித்தனர்.
மாநில ஒதுக்கீட்டில் வரும் முதுநிலை மருத்துவ இடங்களை நீட் தேர்வு தேர்ச்சி கொண்டே நிரப்ப வேண்டும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், முன்னதாக செய்யப்பட்ட ஒதுக்கீடுகளுக்கு இந்த தீர்ப்பு பொருந்ததாது என்றும் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தென் மாநிலங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
அதில் ,” உச்சநீதிமன்றம் தீர்ப்பு தொடர்பாக, சம்பந்தப்பட்ட சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செய்து, தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். முதுநிலை மருத்துவர் மாணவர் சேர்க்கை தொடர்பான சட்ட வல்லுநர்களோடு சரியான கலந்துரையாடல் செய்து பின்னர், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறிப்பாக அரசு பணி மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தாக்கல் செய்யப்படும். தமிழ்நாட்டில் சாதகமாக பார்ப்படுவது மற்ற மாநிலங்களில் பாதகமாக பார்க்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்களை ஒருங்கிணைப்பது என்பது சரியாக வராது.
இதன் மூலம் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தந்துகொண்டிருக்கும் உரிமைகள் பாதிக்கப்படும். அதே, சமயம் தமிழ்நாட்டின் உரிமை பறிபோகக்கூடாது.
இது மாநில அரசின் 69% இடஒதுக்கீடு முறைக்கு பாதிப்பையும் மிகப்பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தும் . 1200 முதுநிலை மருத்துவ இடங்கள் பறிபோகும் சூழல் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது.
தற்போது நம்மிடத்தில் 2600க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கிறது. இதை பறித்து மற்றவர்களுக்கு தரவேண்டும் என்ற சூழ்ச்சியாகதான் இதை நாம் பார்க்கிறோம். ஏற்கெனவே இருக்கும் முறை தொடர வேண்டும் என்பதன் அடிப்படையில் சீராய்வு மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.“ என்று தெரிவித்துள்ளார்.