8 வழிச்சாலை திட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? - உச்சநீதிமன்றம் கேள்வி

8 வழிச்சாலை திட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? - உச்சநீதிமன்றம் கேள்வி

8 வழிச்சாலை திட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? - உச்சநீதிமன்றம் கேள்வி
Published on

8 வழிச்சாலை திட்ட விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் 10ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 277.3 கிலோமீட்டர் தொலைவுக்கு 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கப்படும் என கூறி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 8ம் தேதி நிலம் கையகப்படுத்த தடை விதித்தது. இதனையடுத்து, சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி எட்டு வழி சாலை திட்ட செயல் இயக்குனர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திட்ட இயக்குநர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது போன்ற தடையால் பிற திட்டங்களும் செயல்படுத்த முடியாமல் உள்ளது என தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள், எட்டு வழி சாலை திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே நிலத்தை வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. மேலும் திட்டத்திற்கான அனுமதி கிடைக்கப் பெறுவதற்கு முன்பே நிலத்தை எடுத்துக் கொண்டு அதற்கான தரவுகளை சேர்த்துள்ளதற்கான முகாந்திரம் உள்ளது. அதனை சுட்டிக்காட்டியே சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது என குறிப்பிட்டனர். 

மேலும் சாலை திட்டத்திற்கு நிலத்தை வாங்கிய விவகாரத்தில் தவறுகள் நிகழ்ந்து இருப்பதையும் பார்க்க முடிகிறது. எனவே இது  சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய விஷயம் இல்லை. விரிவாக விசாரிக்க வேண்டியது என தெரிவித்தனர். மேலும் எட்டு வழி சாலை நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக  உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்ததோடு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மத்திய வேளாண் அமைச்சகம், தமிழக அரசு தலைமை செயலாளர், திருவண்ணாமலை ஆட்சியர், சேலம் ஆட்சியர், காஞ்சிபுரம் ஆட்சியர், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜூலை முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனர். 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திட்ட இயக்குனர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல்துறை அனுமதியை பெறுவதற்கு நிலத்தை கையகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும் நிலத்தை கையகப்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் எந்தவிதமான கட்டுமானத்தையும் மேற்கொள்ள மாட்டோம் என்ற உறுதியை அளிப்பதாகவும் தெரிவித்தார். 

இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாளை காலைக்குள் தேசிய நெடுஞ்சாலைத்துறை தனது நிலைப்பாட்டினை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை இந்த மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவிற்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பாக முடிவு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிறைய பேரை உச்சநீதிமன்றத்தில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து யார் யாரெல்லாம் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com