கால அவகாசம் தமிழகத்திற்கு பின்னடைவு அல்ல: அமைச்சர் சி.வி.சண்முகம்
மே 3ம் தேதி வரையிலான அவகாசத்தை பின்னடைவாக பார்க்க முடியாது என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு டெல்லியில் புதிய தலைமுறை செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கருத்தினை தெரிவித்தார். அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், “ஸ்கீம் என்ற திட்டத்தை வகுத்து தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. காலந்தாழ்த்தாமல் வரைவு திட்டத்தை உருவாக்குமாறு நீதிமன்றம் கூறியது வரவேற்கத்தக்கது. உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு நடுவர்மன்ற தீர்ப்பை இணைத்தே அளிக்கப்பட்டுள்ளது. அதனால், நடுவர் மன்ற தீர்ப்பில் உள்ள அம்சங்களை கணக்கில் எடுத்தே திட்டத்தை வகுக்க வேண்டும்.
மே 3ம் தேதி வரையிலான அவகாசத்தை தமிழகத்திற்கு பின்னடைவாக பார்க்க முடியாது. எந்த மாநில அரசுடனும் இதுகுறித்து கலந்து ஆலோசிக்க தேவையில்லை. மத்திய அரசு தானாக இந்தத் திட்டத்தை வகுத்து தாக்கல் செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது” என்று கூறினார்.
முன்னதாக 4 மாநிலங்களின் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு மே 3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மத்திய அரசு செயல்திட்டத்தை சமர்பித்தபின் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் கருத்துகள் கேட்கப்பட்டு செயல் திட்டம் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தது.