கோவில் வளாகங்களில் கடைகள் நடத்தலாம் - உச்சநீதிமன்றம் உத்தரவு
கோயில் வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த கடைகள் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தை அடுத்து, கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை கடந்த ஜனவரி 31ஆம் தேதிக்குள் அகற்றுமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு எதிராக வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதில், அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இதனையடுத்து வியாபாரிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் ஆணைக்கு நீதிபதிகள் ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. நீதிபதிகள் சாப்ரே மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முறைப்படி ஏலம் எடுத்துதான் கடைகளை நடத்தி வருவதாகவும், அவசர கதியில் கடைகளை அகற்ற முடியாது என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தீர்ப்பளித்த நீதிபதிகள், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கடைகளை அகற்றுமாறு தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர். கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.