அமைச்சர் துரைமுருகன் வழக்கு.. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சர் துரைமுருகன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி தீபங்கர் தத்தா அமர்வு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. துரைமுருகன் கடந்த 1996-2001ஆம் ஆண்டு கால திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் சொத்துக்களைக் குவித்ததாக 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டார். தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி கடந்த 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், துரைமுருகனை விடுவித்த வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.