தமிழ்நாடு ஆளுநருக்கு சரமாரி கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்!
மசோதாக்களுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு ஆளுநருக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் அரசுக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது எனவும் தெரிவித்தனர். ஆளுநர் தரப்போ, அரசமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுத்தே ஆக வேண்டுமென கூறுவது, அப்பிரிவை திரித்து கூறுவது என வாதிட்டது.
ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரிடம் மசோதா நிலுவையில் இருக்கும்போது, அது சட்டப்பேரவையில் காலாவதியாகாது எனவும், ஆளுநர் மசோதா மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும் வாதிட்டது. மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது என்பதே, நிராகரிப்புதான் எனவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசமைப்பின் 200வது பிரிவின் முதல் விதி குறித்து தெளிவுப்படுத்த ஆளுநர் தரப்பிற்கு அறிவுறுத்தினர். பின்னர், வழக்கு விசாரணையை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.