கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அந்த அமைப்பு நாடியது. அப்போது ஆறு இடங்களை தவிர 44 இடங்களில் பாதுகாப்போடு உள்ளரங்க கூட்டமாக நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த இரு நீதிபதி அமர்வு, ‘அணிவகுப்பு நடத்துவது அரசியல் சட்டம் வழங்கியிருக்கக் கூடிய அடிப்படை உரிமை. கூட்டங்கள் பேரணிகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாமே தவிர முழு தடையை விதிக்க முடியாது. எனவே ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் தமிழ்நாடு காவல் துறை வழங்கவேண்டும்’ என உத்தரவிட்டதோடு பேரணியை நடத்த அனுமதியும் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இதன் வழக்கு விசாரணை நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வில் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, “எதற்காக எங்களது பேரணியை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை” என ஆர்எஸ்எஸ் தரப்பு கேள்வி எழுப்பியது. அதற்கு “சட்டம் ஒழுங்கு பிரச்னை தவிர வேறு எதுவும் இல்லை” என தமிழ்நாடு அரசு பதில் அளித்தது.
மேலும் தமிழ்நாடு அரசு, “பொதுப் பாதுகாப்பிற்கு பாதிப்பு என்றால் அரசாங்கம் உரிய கட்டுப்பாடுகளை எந்த ஒரு விவகாரத்திலும் விதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கேட்பது போல எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லாத அனைத்து இடங்களுக்கும் பொதுவான ஒரு அனுமதியை நிச்சயமாக வழங்க முடியாது. ஒவ்வொரு பகுதிக்கும் நிலைமை வெவ்வேறாக இருக்கும். அதன் அடிப்படையில் தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இத்தகைய உரிமைகள் அரசுகளுக்கு இருக்கிறது என பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஐந்து இடங்களில் பேரணி நடத்துவதற்கு முதலில் அனுமதி வழங்க முடியும். ஆனால், 50 இடங்களில் ஒரே நாளில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது. உளவுத்துறை என்ன அறிக்கையை கொடுக்கிறார்களோ அதன் அடிப்படையில் தான் எந்த ஒரு முடிவையும் அரசு எடுக்கும். அதிக சென்ஸிட்டிவான விஷயங்களை ஏனோ தானோ என்று அணுக முடியாது. கண்களை மூடிக்கொண்டு உளவுத்துறை அறிக்கையை ஒதுக்கி வைத்து விட்டு அனுமதியை கொடுக்க வேண்டுமா அல்லது தீர விசாரித்து பிரச்னை இல்லாத இடங்களில் அனுமதியும் பிரச்னைக்குரிய இடங்களில் அனுமதி மறுப்பும், சமாளிக்க முடியும் என்ற இடங்களில் கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டுமா? இதில் எதை நாங்கள் செய்யட்டும்?” என உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியது.
தொடர்ந்து வாதங்களை முன்வைத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு, “சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றால் அதனை தடுத்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதிலிருந்து தவறி, அனுமதி மறுப்பது என்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. ‘நீங்கள் பேரணி நடத்தினால் யாராவது வந்து தாக்குதல் நடத்தக்கூடும்; எனவே அனுமதி மறுக்கிறோம்’ என தமிழ்நாடு காவல் துறையினர் கூறுகிறார்கள். இதனை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?
தமிழக அரசு பாதுகாப்பு காரணத்தை குறித்து கூறுகிறது. குறிப்பாக தடைசெய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பால் அச்சுறுத்தல் வரலாம் என கூறுகிறது. இதை எவ்வாறு ஏற்க முடியும்? தடை செய்யப்பட்ட அமைப்பு உறுப்பினர்களால் அச்சுறுத்தல் வருகிறது என்றால், அவர்கள் மீதுதான் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணியை தடை செய்வது தீர்வு அல்ல” எனக் கூறியது
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் அன்று (கடந்த மார்ச் 27ஆம் தேதி) ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தது. இதன் மூலம் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.