ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆதரவு: முதல்வருக்கு மனு!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆதரவு: முதல்வருக்கு மனு!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆதரவு: முதல்வருக்கு மனு!
Published on

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக் கோரி முதல்வரின் சிறப்புப் பிரிவுக்கு 1 லட்சம் ஆன்லைன் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், ஆகவே தமிழக அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள், “ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். ஏனெனில் அதனால் ஏற்பட்ட வேலையிழப்புக்கள் தூத்துக்குடியில் மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குகின்றன. அந்த வகையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஒப்பந்ததாரர்கள், லாரி உரிமையாளர்கள், மீனவர்கள், வியாபாரிகள், கனரக வாகன பழுதுபார்ப்பவர்கள் உள்ளடக்கிய கூட்டமைப்பு சார்பில் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் சுமார் 20,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஆலையை சார்ந்திருந்த பல்வேறு தொழில்கள் முடங்கியதால் பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை இழந்தவர்கள் அன்றாட உணவிற்குக் கூட வழியில்லாமல் தூத்துக்குடியை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை, மூடப்பட்டதன் விளைவாக தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இவற்றையெல்லாம் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை தவறிழைத்திருந்தால் அதற்கான தீர்வு என்ன என்பதைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். நிரந்தரமாக ஆலையை மூடுவது என்பது எந்த விதத்தில் தீர்வாக இருக்கக் கூடும்? ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு வேலையை இழந்ததால், அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத இன்னல்களுக்குத் தூத்துக்குடி வாழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதிலிருந்து, உள்ளூர் மக்கள் பயனடையும் வகையில் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

எங்களுக்கென்று வேலை வாய்ப்பு இருந்தால் மட்டுமே எங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக மீட்டெடுக்க முடியும். கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு உதவியாக இருந்த ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டு , வேலை வாய்ப்பு வழங்கி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தூத்துக்குடி மாசுபாட்டிற்கு சாலைப் புழுதியும், வாகனப் புகையும்தான் முக்கியக் காரணம் என்று பல அறிக்கைகள் உறுதிப்படுத்துகிறது. அதற்கேற்றார்போல ஆலை மூடப்பட்டதில் இருந்து மாசு அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆகவே அவற்றையும் கருத்தில் கொள்ளவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை, தலைமை செயலகத்தில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பினர் கொடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com