”தமிழ்நாட்டு மக்களின் 'இதயக்கனி’ அண்ணாமலை” - அதிமுக தலைவர்களுக்கு எதிராக கொந்தளித்த கரு.நாகராஜன்!

அதிமுகவுக்கும், பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாரதிய ஜனதா மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் அதிகமுகவின் கண்டன தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்திருந்த அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஜெயலலிதா குறித்து மறைமுகமாக அவர் தெரிவித்த கருத்துக்கு அதிமுக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜகவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய நேரிடும் எனவும் அதிமுக மூத்த தலைவர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்தச் சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இதில், அண்ணாமலைக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு பாரதிய ஜனதா மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "அண்ணாமலையை விமர்சிக்க அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தகுதியில்லை. அண்ணாமலை மீது அதிமுக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதை எதிர்க்கிறோம்; வருத்தப்படுகிறோம். அண்ணாமலையை பற்றி விமர்சனம் செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தகுதியில்லை; பொம்மை தலைவர் அல்ல; தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர் அண்ணாமலை.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. தான் பேசியபின் என்ன பேசினோம் என்பதே சி.வி.சண்முகத்திற்கு தெரியாது. மாமூல் வாங்கிய அதிகாரி அல்ல, அண்ணாமலை; மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவர். தமிழ்நாட்டு மக்களின் 'இதயக்கனி' அண்ணாமலை. அவர்மீது உள்நோக்கத்துடன் களங்கம் சுமத்த முயல்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். அவருடைய பேட்டியை இந்த வீடியோவில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com