“அரசியல் கட்சியினரை கொல்லை புறமாக வந்து பார்த்தவர் விஜய்” - காரசார விவாதம்
‘பிகில்’இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளியான ‘மெர்சல்’. இந்தத் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தில் இடம் பெற்றிருந்த ஜிஎஸ்டி சம்பந்தமான வசனங்களை கண்டித்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பிட்ட வசனத்தை நீக்க வலியுறுத்தி குரல் எழுப்பி வந்தனர். நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து ‘மெர்சல்’ திரைப்படம் இந்திய அளவில் பிரபலமானது.
இதையடுத்து கடந்த ஆண்டு வெளியான ‘சர்கார்’ திரைப்படமும் அரசியல் குறித்தே கதை நகர்த்தப்பட்டது. இதில் ஆளுங்கட்சிக்கு எதிராக சில காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. மேலும் இத்திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சும் வேறு லெவலில் இருந்தது.
இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘பிகில்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய விஜய் பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோவப்படாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று கூறினார்.
அத்துடன், “சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும். சமூக வலைத்தளங்களில் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். என்னுடைய போட்டோவை உடையுங்கள், போஸ்டரை கிழியுங்கள் ஆனா என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க” என்றும் விஜய் தெரிவித்தார்.
மேலும், யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வைத்தீங்கன்னா எல்லாம் சரியாக இருக்கும் எனவும் அரசியலில் புகுந்து விளையாடுங்க; ஆனால் விளையாட்டுல அரசியலை கொண்டு வராதீங்க எனவும் தெரிவித்தார். இதுகுறித்து தற்போதும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கதையே இல்லாத திரைப்படத்தை அதிக நாட்கள் ஓட்டுவதற்காக, நடிகர் விஜய் அரசை விமர்சித்து பேசியுள்ளதாக அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “நடிகர் விஜயின் திரைப்படங்கள் பரபரப்பு பேச்சால் ஓடுகின்றன. திரைப்படத்தை எப்படியாவது அதிகநாட்களுக்கு ஓட்ட இப்படி பேசுகிறார். பேனர் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. யாரை எங்கு வைக்க வேண்டும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். கதையே இல்லாத திரைப்படங்களில் விஜய் நடிக்கிறார்” எனத் தெரிவித்தார்.
விஜய் எந்தப்பிரச்னை குறித்து பேசினார் எனத் தெரியவில்லை எனவும் குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறது அதிமுக அரசு எனவும் திமுக எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
விஜய் பேச்சு குறித்து அதிமுகவின் கோகுல இந்திரா கூறுகையில், “கருத்தை சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும். பட வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் கட் அவுட் வைத்து பால் அபிசேகம் செய்வதை விஜய் ரசித்துள்ளார். அவர் இதுபோன்ற கருத்துகளை சொல்லக்கூடாது. அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க செயல்பட்டு வருகிறது. உங்கள் படம் ஓட வேண்டும் என்று அரசியல் கட்சியினரை கொல்லை புறமாக வந்து பார்த்த கதை எல்லோருக்கும் தெரியும். விளம்பரம் தேட இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். கட் அவுட் வைக்க வேண்டாம் என்று எந்த ரசிகர்களை தடுத்துள்ளீர்கள். சுபஸ்ரீ வீட்டிற்கு சென்று விஜய் பார்த்தாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய இயக்குநர் அமீர், “பதாகைகள் வைத்தது உண்மைதான். மறுக்கமுடியாது. அது இந்தக் கலாச்சாரத்தின் அவலம். தமிழகமே பதாகை கலச்சாரத்திற்கு மாறிவிட்டது. ஆனால் நடிகர் விஜய் பேசிய விஷயம் பொய் ஆகி விடாது. சுபஸ்ரீ இறந்தவுடன் ஆளுங்கட்சியினர் சென்றிருக்க வேண்டும் அல்லவா? அதை கேட்காமல் விஜய் போனீர்களா என்று கேட்பது நியாயம் இல்லை. லாரி டிரைவரை கைது செய்வதும் அச்சகத்திற்கு சீல் வைப்பதும் அரசியல் கோமாளித்தனம். மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்” என தெரிவித்தார்.