”அந்த 3 மணி நேரம் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்” - அக்னிக்கு முன்பே வாட்டும் வெயில்!

”அந்த 3 மணி நேரம் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்” - அக்னிக்கு முன்பே வாட்டும் வெயில்!
”அந்த 3 மணி நேரம் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்” - அக்னிக்கு முன்பே வாட்டும் வெயில்!

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் மேற்கு உள் மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. குறிப்பாக பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கி உள்ளது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகி இருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் மாணவர்களின் நலன் கருதி தெலுங்கானாவில் அனைத்துப் பள்ளிகளும் ஏப்ரல் 24 வரை அரைநாள் மட்டுமே செயல்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கடுமையான வெயில் நிலவுகிறது. வரும் நாட்களில் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்ப நிலை பதிவாகியுள்ளது. ஈரோட்டில் நேற்று 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையும், சேலத்தில் 100.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், நாமக்கல்லில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 93 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. தொடர்ந்து இரண்டு நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நிலவும் வெப்ப நிலை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “இந்த ஆண்டு நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெப்ப நிலை சராசரியை ஒட்டியே உள்ளது. குறிப்பாக, சில நாட்களாக மேற்கு உள் மாவட்டங்களான திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் கிழக்கிலிருந்து காற்று வீசிக்கொண்டு இருக்கிறது.

அந்த மாவட்டங்களில் இந்த காற்று, உள்ளே போகப்போக தரைக் காற்றாக மாறிவிடும். ஆகையால், மேற்குப் பகுதியில் தரைக்காற்று பிட் ஆகும்போது அங்குள்ள வெப்ப நிலை அதிகரித்து காணப்படும். அதேநேரத்தில் அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வரும் நாட்களில் வெப்ப அலையை எதிர்கொள்ள சுகாதாரத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனவும், குழந்தைகள், வயதானோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குள் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை வெயிலில் செல்ல வேண்டியிருந்தால் குடை, உடலை முழுவதுமாய் மறைக்கும் வகையில் பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும், அதிக தண்ணீர் பருக வேண்டும். உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அது அறிவுறுத்தியுள்ளது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com